டெல்லி: இந்தியாவில் முக்கிய தலைவர்கள், அரசுத் துறைகள், பிரபலங்கள் ஆகியோர் இந்திய செயலியான ‘கூ’வில் கணக்குகள் தொடங்கியுள்ளனர்.
ட்விட்டரைப் போன்ற மைக்ரோ பிளாகிங் தளமான ‘கூ’ இந்திய மொழிகள் அனைத்திலும் தங்கள் பயன்பாட்டைப் பயனாளர்களுக்கு வழங்குகிறது. மத்திய அரசின் ஆத்ம நிர்பார் திட்டமான தற்சார்பு இந்தியா திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட ‘கூ’ செயலி, அதில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியும் கண்டது.
அந்த வெற்றியை அடுத்து, மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டருக்கு இதுதான் சரியான மாற்று என்று மத்திய அரசு தனது நம்பிக்கை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து, அரசின் அனைத்து துறை கணக்குகளும் இதில் தொடங்கப்பட்டது. இதற்கான உள் காரணம் ஒன்றும் உள்ளது.
அரசு துறை ட்விட்டரை வெறுக்க காரணம்
ஆம், டெல்லி விவசாயிகள் போராட்ட சமயத்தில் விவசாயிகள் பலியாவதை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு ஹேஷ்டேக் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 257 ட்விட்டர் பதிவுகள், ஒரு ஹேஷ்டேக்கை நீக்கக் கோரி மத்திய அரசு ட்விட்டருக்கு உத்தரவிட்டது. ஆனால், இதில் சில பதிவுகள் நீக்கப்பட்டாலும், சில மணி நேரத்தில் தடையை ட்விட்டர் நீக்கியது. இது தொடர்பாக விளக்கம் கேட்ட மத்திய அரசு, சர்ச்சைக்குரிய கணக்குகள் மற்றும் பதிவுகளை நீக்காவிட்டால், அபராதமும், சிறை தண்டனை விதித்து சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்புவதாகப் பாகிஸ்தான், காலிஸ்தான் ஆதரவு கொண்ட 1,178 கணக்குகளை நீக்க மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் உத்தரவிட்டது. இவ்வாறு கணக்குகளை முடக்குவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என கூறி ட்விட்டர் நிர்வாகம், மத்திய அரசுடன் ஆலோசிக்க அனுமதி கேட்டது. இச்சூழலில், மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து 500 கணக்குகளை மட்டுமே இடைநீக்கம் செய்திருப்பதாக டிவிட்டர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
கருத்து சுதந்திரத்தை சிதைக்கவிடாத ட்விட்டர்
அதில், ‘மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து 500 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ட்விட்டர் விதிமுறைப்படி, சட்ட விரோத பதிவுகள் குறித்து புகார் வந்தால், அது உள்நாட்டு சட்டப்படி மீறப்பட்டதா, ட்விட்டர் விதிமுறையையும் மீறியிருக்கிறதா என ஆராய்வோம். உள்நாட்டுச் சட்டத்தை மட்டும் மீறியதாக இருந்தால், அந்நாட்டில் மட்டும் முடக்கப்படும். அதுபோல, 500 கணக்குகள் இந்தியாவில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளன. இதில், செய்தி ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் கணக்குகள் எதுவும் நீக்கப்படவில்லை. அவ்வாறு செய்வது இந்தியச் சட்டத்தின் கீழ் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதற்கான அடிப்படை உரிமையை மீறுவது என்று நாங்கள் நம்புகிறோம்’ எனக் கூறியுள்ளது.
அதேசமயம், எந்தெந்த கணக்குகள் முடக்கப்பட்டன என்ற விவரத்தையும் ட்விட்டர் நிர்வாகம் தரவில்லை. இவ்வாறு தொடர்ந்து ட்விட்டர் வெறுப்புணர்வு கருத்துக்களைத் தவிர்த்து கருத்து சுதந்திரத்தின் பக்கம் நிற்பதால், ட்விட்டரைப் போன்றே உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ‘கூ’ என்ற மைக்ரோபிளாகிங் செயலிக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. இந்த செயலியில் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், கப்பல் போக்குவரத்துத்துறை உள்படப் பல அரசு அமைப்புகள் இணைந்துள்ளன.
‘கூ’ செயலி
- கூ செயலி, ட்விட்டர் போன்றே செயல்படும் மைக்ரோபிளாகிங் செயலியாகும்
- இந்த செயலியை அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மயாங் பிதாவ்கா ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்டது
- இது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
- பின்னர், ஆகஸ்ட் 2020 மாதத்தில் இந்த செயலி, பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் போட்டியில் வெற்றி பெற்று 2ஆம் இடத்திற்கான பரிசை வென்றது
- இதுவரை ‘கூ’ செயலியை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்
- பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியர்கள் ‘கூ’ செயலியைப் பயன்படுத்த ஊக்குவித்தார்
- தற்சமயம் ‘கூ’ செயலி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழி பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
- விரைவில் மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பங்களா, ஒரியா, அசாமிஸ் போன்ற மொழிகள் சேர்க்கப்பட இருக்கின்றன.