சான் பிரான்சிஸ்கோ: அதிபர் ட்ரம்பால் தேர்தல் பரப்புரைக்காக தொடங்கப்பட்ட செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பரப்புரைக்காக 'தி ட்ரம்ப் 2020' எனும் செயலியை ஆண்ட்ராய்டு கைபேசிகளுக்கு ஏற்றவாறு ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் கைபேசிகளுக்கு ஏற்றவாறு ஆப் ஸ்டோரிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்த செயலி மூலம் அவரது ஆதரவாளர்களுக்குத் தனது செயல்பாடுகளைக் கூறிவந்தார். ஆனால் கடந்த அக்டோபர் 30, 2020 முதல் இந்த செயலியில் எந்த பதிவுகளும் போடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கவனித்த ஆண்ட்ராய்டு இணையக் காவலர்கள், இந்த செயலி குறித்துச் சம்பந்தப்பட்ட துறைக்குத் தகவல் அளித்தனர்.
தொடர்ந்து, இந்த செயலியை நீக்க கூகுள் நிறுவனத்தில் ப்ளே ஸ்டோர் நடவடிக்கை எடுத்துள்ளது. என்னதான் ப்ளே ஸ்டோரிலிருந்து ட்ரம்ப் செயலி நீக்கப்பட்டாலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.