'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்ற கார்ல் மார்க்ஸின் புகழ் பெற்ற வாசகம் சற்றேறக்குறைய 130 ஆண்டுகளைக் கடந்து இன்றைக்கும் உலகத் தொழிலாளர் தினமாக உயிர்ப்புடன் நிற்கிறது. உழைக்காத ஒரு நொடியில் இந்த உலகத்தின் பயணமும் ஒரு நொடி பின்தங்குகிறது என்ற எதார்த்தத்துடன் உழைப்பை அணுக வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம்.
மிருகத்தனமாக தொழிலாளர்கள் 18 மணி நேரம் ஆலைகளில் வதைபட்டுக் கொண்டிருந்த காலத்தில், எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர பொழுது போக்கு, எட்டு மணி நேர உறக்கம் என்ற முழக்கம் சிக்காகோ நகரில் கடந்த 1886-ஆம் ஆண்டு ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. செங்குருதி சிந்திய அந்த நாட்களில் தொழிலாளர்களின் கடும் போராட்டத்திற்கிடையேதான் இந்த உரிமை சாத்தியமானது. அதனை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
மே தினம் என்றும், உலக தொழிலாளர்கள் தினம் என்றும் அழைக்கப்பட்டுவரும் மே 1ஆம் தேதி, உலக தொழிலாளர் வர்க்கத்தின் திருநாள் என்றால் அது மிகைச்சொல் அல்ல.
கரடு முரடாய் கிடந்த சாலைகளை செப்பனிட்டு, காடுகளைத் திருத்தி வயல்கள் அமைத்து, பருத்தியில் கிடந்த பஞ்சை ஆடையாக நூற்று, கழனிச் சேற்றில் உடல் பட உழைத்து, இந்த உலகத்தைக் கட்டமைத்ததுடன் இன்றும் சிற்பமாய் செதுக்கிக் கொண்டிருப்பவன்தான் உழைப்பாளி.
அவனின்றி இங்கு ஓரணுவும் அசையாது. உழைப்பின்றி இங்கு எதுவும் சாத்தியமில்லை எனும்போது, உழைப்பின் மகத்துவமும், உழைப்பாளியின் உன்னதமும் எளிதாகப் புரியும். நமது ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வியல், விவசாயி, நெசவாளி என ஏதோ ஒரு வகையில் உழைப்புடன் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. அவர்களின் உழைப்போடு நமது உழைப்பும் எப்படியோ ஒன்றிணைகிறது.
ஆனால், இந்த உழைப்பில் சரிசமமான பங்கு பெண்களுக்கும் இருக்கிறது என்பதை உணரத் தவறியவர்களாய் நாம் இருக்கிறோம் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உடலுழைப்பில் ஆணுக்கு நிகராக பெண்களும் ஈடுபடுகின்ற எத்தனையோ தொழில்களை நாம் பார்த்தோமேயானால், பெண்கள் எத்தனை கடுமையான உழைப்பாளிகள் என்பதை உணர முடியும். இந்தத் தொழிலில்தான் பெண்கள் ஈடுபட வேண்டும் என்ற பாகுபாடின்றி, அனைத்திலும் பெண்களும் தங்களது உழைப்பை பெருமளவு வழங்கத் தொடங்கிவிட்டார்கள். விமானம் ஓட்டுவது தொடங்கி காய்கறி விற்பனைவரை நீக்கமற அவர்களது உழைப்பு தவிர்க்க இயலாததாகி வருகிறது.
'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்... எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி' என்று பாடும் பாரதியின் புதுமைப் பெண்கள் தற்போது புற்றீசலாய்ப் புறப்பட்டு, பெரும்பணி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குரிய அங்கீகாரம் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் உலகத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, 2018ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள 350 கோடி தொழிலாளர்களில் பெண்களின் பங்கு வெறும் 48 விழுக்காடாகும். மாறாக ஆண்களின் பங்கு 75 விழுக்காடாகும். 5-ல் 3 தொழிலாளர்கள் ஆண்களாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், கடந்த 2003ஆம் ஆண்டுக்கு முன் இருந்த நிலையைவிட தற்போது பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடியிருந்தாலும்கூட, பெண்களுக்கான சம வாய்ப்பு இன்னும் எட்டவில்லை என்பது உலகளாவிய நிலையாக உள்ளது.
இந்தியாவில் உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களில் பெண்களின் விழுக்காடு ஆண்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இருவருக்கும் இடையிலான இடைவெளி என்பது உலக சராசரியைக் காட்டிலும் மிகவும் கூடுதலாக உள்ளது. இதற்குக் காரணம் இங்கு பாரம்பரியமாகவே இருந்து வரும் ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகள். அதே போன்று உழைப்புக் கூலியிலும் ஆண், பெண் இருவருக்கும் கடும் பாகுபாடு நிலவி வருவது வருத்தத்திற்குரியது. இந்த நிலை மாற வேண்டும்.
உலகளாவிய அளவில் பெண் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த உழைப்புச் சுரண்டல், இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. அவர்களுக்குரிய நீதியை நோக்கி நகரும்போதுதான் தொழிலாளர் சமூகத்தின் உண்மையான வர்க்க நலன் என்பது போற்றிப் பாதுகாக்கப்படும் சூழல் உருவாகும். 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது எவ்வளவு முதன்மைக்குரிய முழக்கமோ, அந்த அளவிற்கு உலகப் பெண் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதும் அதனைவிட முக்கிய கோஷமாகவே பார்க்கத் தொடங்க வேண்டும்.