சென்னை பல்லாவரம் அடுத்த வாசுகி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி(45). இவர் ஊரப்பாக்கம் அருகேயுள்ள அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பம்மலில் இருந்து பல்லாவரம் செல்வதற்காக அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறியுள்ளார்.
பல்லாவரம் ஆடு தொட்டி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, ஆட்டோவிலிருந்த மற்றொரு பெண் சரஸ்வதியின் தாலிச் சங்கிலியை அறுத்ததோடு கீழே தள்ளி விட்டு ஆட்டோவில் தப்ப முயன்றுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆட்டோவை மடக்கி பிடித்து உடனடியாக பல்லாவரம் காவல்துறைக்கு தகவலளித்தனர்.
கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த சரஸ்வதி 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரஸ்வதியின் நெற்றியில், 7 தையலும், காதில் மூன்று தையலும் போடப்பட்டுள்ளது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த இடம் சங்கர் நகர் பகுதிக்கு உட்பட்டது என்பதால், ஆட்டோ ஓட்டுநரும், அப்பெண்ணும் சங்கர் நகர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(26) ஆட்டோ டிரைவர், பம்மல் பகுதியைச் சேர்ந்த அமலோர்பவ ரோஸ்மேரி(23) என்பதும் தெரியவந்தது.
மேலும், இதுபோன்று வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனரா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சதீசன் நீதிமன்றத்தில் சரண்