திருப்பூர்: அண்ணா நகர் அரசு மதுபான கடையில் அதிக விலைக்கு மதுவை விற்று வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டன. சில நாட்களுக்கு முன்பு இந்தக் கடைகள் திறக்கப்பட்டு, அரசு வழிகாட்டுதலின் படி விற்பனை நடைபெற்றுவருகிறது. இச்சூழலில் திருப்பூரிலுள்ள சில மதுபானக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்துவருகிறது.
இருப்பினும் மதுப்பிரியர்கள் மது குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தால் கூடுதல் விலையை கண்டு கொள்வதில்லை. ஆனால், ஒருசிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று புகார் தெரிவித்து வருகின்றனர். இவ்வேளையில், பி.என்.ரோடு பாண்டியன் நகரை அடுத்த அண்ணாநகரிலுள்ள மதுபானக் கடையில் (கடை எண்.2312) அனைத்து விதமான மது வகைகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட ரூ.20, 30 அதிகமாக வைத்து விற்பனை நடைபெறுவதாக தெரிகிறது.
இதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் விற்பனையாளர், கடை கண்காணிப்பாளர் உரிய பதில் தெரிவிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே கடையில் மதுப்பிரியர்கள் அதிக விலை கொடுத்து மது வாங்குவதும், வாடிக்கையாளர் ஒருவர் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரிடம் மதுபாட்டில்களை அரசு உரிய விலையை நிர்ணயித்திருக்கும்போது, அதிக விலைக்கு மது விற்பனை செய்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று கேட்பதும், அதற்கு விற்பனையாளர் அவரிடம் மன்னிப்பு கேட்பது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே திருப்பூரில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட, அதிக விலைக்கு மது விற்பனை செய்பவர்கள் மீது அரசு அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.