தெலுங்கு நடிகை காயத்ரி ராவ் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனக்குப் பல்வேறு எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ், மகேஸ்வரன் என்ற மூன்று பெயர்களையும், அவர்களது எண்ணையும் அப்புகாரில் அவர் இணைத்துக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், காயத்ரி ராவ் குறிப்பிட்ட அம்மூவருக்கும் அழைப்பாணை அனுப்பி விசாரணை செய்தனர். அப்போது, ஆபாச காணொலிகள், தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் வாட்ஸ்அப் குழு ஒன்றில், நடிகை காயத்ரி ராவின் எண்ணை ஒருவர் பதிவிட்டதாகவும், அதை வைத்து அவர்கள் தொடர்புகொண்டதும் தெரியவந்தது. அந்த வாட்ஸ்அப் குழுவில் காயத்ரி ராவின் எண்ணை பதிவிட்டது யார் என விசாரித்தபோது, பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் துறையினர் பரமேஸ்வரனைப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில், நடிகை காயத்ரி ராவ் வீட்டிற்கு கடந்த 9ஆம் தேதி பீட்சா டெலிவரி செய்வதற்காகப் பரமேஸ்வரன் என்ற நபர் சென்றுள்ளார்.
அப்போது பரமேஸ்வரனுக்கும், நடிகை காயத்ரி ராவுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் நடிகை காயத்ரி ராவின் செல்லிடப்பேசி எண்ணை, ஆபாச வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டதாகப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். காயத்ரி ராவ் வீட்டு சிசிடிவியிலும், இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பரமேஸ்வரனைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் டாமினோஸ் பீட்சா நிறுவனம் பரமேஸ்வரனை பணி நீக்கம் செய்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பணம் கேட்டு மிரட்டிய பாஜக பிரமுகருக்குச் சிறை!