மதுரை: இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுக்கு தீவைத்து தானும் தீக்குளித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவைத்ததில் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாய் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமிடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், நேற்றிரவு (செப்.27) கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தமிழ்செல்வி, திடீரென தன்னுடைய இரண்டு குழந்தைகள் வர்ஷாஸ்ரீ, வர்ணிகா ஸ்ரீ ஆகிய இருவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார். தொடர்ந்து தன்மீதும் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். தீவைத்ததில், இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே கருகினர். தற்கொலைக்கு முயன்ற தமிழ்ச்செல்வி, தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திடீர் நகர் காவல்துறையினர், நேரில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு காரணமான பாண்டியை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகள்: குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை!