சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பொன்னி நகர் திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் ஜீவா(43). இவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என கூறப்படுகிறது. ஜீவாவின் எதிர்வீட்டில் வசித்துவருபவர் அருண் அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அருண் வீட்டில் இல்லாதபோது ஜீவா அவரின் வீட்டிற்கு சென்று அருணின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையறிந்த அருண், ஜீவாவை கண்டித்துள்ளார்.
ஆனால் ஜீவா மீண்டும் அருணின் மனைவிக்கு தொலைபேசி வாயிலாக ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருணின் மனைவி இது குறித்து அருணிடம் கூறியுள்ளார்.
பின்னர் கணவன், மனைவி இருவரும் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ஜீவாவை காவல் துறையினர் தேடிவந்துள்ளனர். பின்னர் அவர் பம்மல் பகுதியில் பதுங்கி இருந்தபோது சங்கர் நகர் காவல் துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அருணின் மனைவியை ஒரு வருட காலமாக ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தேன். காதலை ஏற்காததால் அவரின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பினேன் என ஒத்துக்கொண்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண்ணைத் தாக்கிய திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!