கன்னியாகுமரி : மார்த்தாண்டத்தில் இருச்சக்கர வாகனம் விற்கும் கடையிலிருந்து நூதன முறையில் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனம் பட்டப்பகலில் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே அஸ்வின் குமார் என்பவர் திவிக்சன் என்ற பெயரில் இரு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று (செப் .29) கடையை ஊழியர் 10 மணியளவில் திறந்துள்ளார்.
அப்போது, அங்கு முகக்கவசம் அணிந்தபடி நன்றாக உடை அணிந்து வந்த சுமார் 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர், கடையில் வாகனம் வாங்குவது போல் நோட்டம் விட்டுள்ளார். பின்னர் கடையிலிருந்த ஊழியரிடம் ’யமஹா ஆர்15’ இருச்சக்கர வாகனத்தின் விலை குறித்து விசாரித்துள்ளார்.
பின்னர், பெட்ரோல் டாங்கை திறந்து பெட்ரோல் உள்ளதா என்று பார்த்து விட்டு, பைக்கை ஓட்டிப் பார்ப்பது போல அந்த பைக்கை எடுத்துச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
தொடர்ந்து, வாகனத்தை எடுத்துச் சென்றவர், திரும்பி வராததால், இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் அஸ்வின் புகாரளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளை ஆராய்ந்து, வாகனத்தைத் திருடிச் சென்ற நூதன கொள்ளையரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.