நாகப்பட்டினம்: தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதியில், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்க நகைப் பறிப்பில் ஈடுபட்ட காரைக்காலைச் சேர்ந்த சேதுமணி (24), விவேக் (23), கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த விஜய் (26) உள்ளிட்ட மூன்று இளைஞரை, குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்படி, துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் தனிப்படை அமைத்து இவர்களை தேடி வந்தனர். நேற்று (டிசம்பர் 29) காலை, தனிப்படை காவலர்கள், புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காவலர்களை கண்டதும் வாகனத்தை திருப்பிக்கொண்டு வந்த வழியே செல்ல முயன்றனர்.
இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் அவர்களை துரத்திச்சென்று மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் நாகப்பட்டினம் வட்டாரத்தில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
நகைப்பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து, நாகப்பட்டினம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.