கடலூா் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியைச் சோ்ந்தவர் மணிகண்டன். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை மது மயக்கத்தின் உச்ச நிலையிலிருந்த மணிகண்டன், டவுன்ஷிப் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, கழுத்தில் சணல் வெடிகளை அணிந்துகொண்டு, கையில் மண்ணெண்ணெய் கேனுடன் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தார். தனது மனைவியை தன்னுடன் சோ்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் கூறினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள், காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். இந்தத் தகவல் அறிந்ததும், முதன்மைக் காவலர் பாலச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தார். தொடர்ந்து மதுவெறியில் செய்வதறியாது திகைத்து நின்ற, மணிகண்டனிடம் பேச்சுக் கொடுத்து அவாின் தற்கொலை முடிவுக்கு தடைபோட்டார். எனினும் மணிகண்டன் தற்கொலை முடிவில் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் மணிகண்டனின் குழந்தையை அப்பகுதிக்கு கொண்டுவந்தனர். அந்தக் குழந்தையை பாா்த்ததும் மணிகண்டன் மனம் மாறி தனது தற்கொலை முடிவை கைவிட்டார். இதையடுத்து மணிகண்டனை, காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர். கழுத்தில் வெடி மாலை அணிந்து, கையில் மண்ணெண்ணெய் கேனுடன் இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுபோதையில் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை தனது சாமர்த்திய முயற்சிகளால் காப்பாற்றிய முதன்மை காவலர் பாலச்சந்திரனையும் பொதுமக்கள் உள்பட காவலா்களும் பாராட்டினார். மணிகண்டன் தற்கொலைக்கு முயன்ற வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது.
இதையும் படியுங்க: