தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏடிஎம் மையத்தில் கொள்ளை நிகழ்வு நடந்தது. இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான இருவர் தலைமறைவாயினர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.
அதன்படி, தலைமறைவான இருவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, 100க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களது செல்ஃபோன் எண்ணை வைத்து அவர்கள் நடமாட்டத்தை கண்காணித்த போது, லாரி ஒன்றில் செல்வது உறுதியானது. இதையடுத்து அவர்கள் வந்த லாரியை பின்தொடர்ந்த காவல்துறையினர், திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் என்ற இடத்தில் பெட்ரோல் பங்கில் டீசல் போட்டுக் கொண்டிருந்தபோது சுற்றி வளைத்தனர்.
பின்னர் லாரியில் பதுங்கியிருந்த, ராஜஸ்தான் மாநிலம் பராக்பூர் பகுதியைச் சேர்ந்த வாசிம் மற்றும் ஹாசன் ஆகிய இருவரை காவல்துறையினர் பிடித்தனர். அவர்கள் இருவரையும் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் வைத்து ஹைதராபாத் ஏடிஎம் கொள்ளை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்!