தி.நகர் நியூ போக் சாலையில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே, கையில் கத்தியுடனும் கழுத்தில் காயங்களுடனும் ஒருவர் இறந்துகிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தபின், மாம்பலம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இறந்தவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த கடலை வியாபாரியான நாராயணமூர்த்தி (35) என்பது தெரியவந்தது.
அவரது கையில் கத்தி இருந்ததால், கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாமோ என்ற சந்தேகம் காவல் துறைக்கு எழுந்தது.
அதன் பிறகு அவர்கள் செய்த ஆய்வில், கழுத்தில் குத்தப்பட்டு நாராயணமூர்த்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறைக்கு, ஜாஃபர்கான் பேட்டையை சேர்ந்த நாகராஜன், காமேஷ், சஞ்சய், பாலாஜி, ரவி ஆகியோருடன் நாராயணமூர்த்தி நேற்றிரவு மது அருந்தியது தெரிய வந்தது.
அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, மதுபோதையில் இருந்த நாராயணமூர்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டியுள்ளார். அப்போது அவரை மடக்கிப்பிடித்த ரவி, நாகராஜன், சஞ்சய், பாலாஜி, காமேஷ் ஆகியோர், அக்கத்தியைக் கொண்டே நாராயணமூர்த்தியை கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த நாகராஜன், பாலாஜி, சஞ்சய், காமேஷ் ஆகியோரை மாம்பலம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், ரவி என்பவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை: குற்றவாளிகளைத் தேடும் முயற்சியில் இளம்பெண்!