திருவண்ணாமலை பகுதியில் பல இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (48) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையல் அடைத்தனர்.
மேலும், போளூர் தாலுகா, அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (43), செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கோபி (32), வி.எஸ். பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை (45) ஆகியோர் மீது பலமுறை வழக்குப்பதிவு செய்தும், தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்ததால், போளூர் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதுபோல, செங்கம் தாலுகா, வலையாம்பட்டு கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த பிரபு (39) என்பவரை செங்கம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகள் 5 பேரின் சட்டவிரோதச் செயலை கட்டுப்படுத்த வேண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி வழிப்பறி, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 104 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.