கோவை ராஜவீதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம், திருப்பூரைச் சேர்ந்த சுதா என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதனை நம்பிய வினோத்குமாருக்கு சில தினங்களுக்கு முன், பொள்ளாச்சி அடுத்த நாலாம் மூளை சுங்கம் என்ற பகுதிக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற வினோத்குமாரை, பூவலப்பருத்தி கிராமத்தில் உள்ள ஆறுமுகம் என்பவரது பண்ணை வீட்டுக்கு அப்பெண் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்தபோது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல், வினோத்குமாரை தாக்கி அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க சங்கிலியை பறித்ததுடன், அவரை பாலக்காடுக்கு கொண்டுசென்றனர். மேலும், வினோத்குமாரை மிரட்டி 27 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தைப் பறித்துள்ளனர்.
அதன்பின் பாலக்காட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து, மறுநாள் வினோத்குமாரை பொள்ளாச்சியில் விட்ட கும்பல், அவரது காருடன் தப்பிச் சென்றனர். மேலும், ரூ. 25 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு காரை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த நபர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் வெளியில் தெரிந்தால் தனக்கு அவமானம் ஏற்படும் என்று அஞ்சிய வினோத்குமார், காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், ரூ. 10 லட்சம் கொடுத்து காரை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆழியாறு காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தமிழ்நாடு - கேரள எல்லையான மீனாட்சிபுரம் அருகே நேற்று காரில் வந்த பாலக்காட்டைச் சேர்ந்த செந்தில்குமார் (56), சதீஷ் (31), பிரசாந்த் (24), சித்தூரைச் சேர்ந்த கமால் (50), பள்ளிபுரத்தைச் சேர்ந்த அஜய் (38), திருப்பூரைச் சேர்ந்த சுதா (30) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஜவுளி வியாபாரி வினோத்குமாரை மிரட்டியது தெரியவந்தது.
கூட்டுக் கொள்ளை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், வினோத்குமாரிடம் மட்டும் இதுபோல் நடந்து கொண்டார்களா அல்லது வேறு யாராவது இவர்களிடம் சிக்கி உள்ளார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்ஸோவில் கைது