சென்னை அடுத்த ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தயாளன் (20). இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 27ஆம் தேதி தயாளன் வீட்டிலிருந்து பூங்காவுக்கு புறப்பட்டார். அப்போது, அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது.
இதில் படுகாயமடைந்த தயாளனை மீட்ட அக்கம் பக்கத்தினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் அடிப்படையில், ஆவடி காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான காவலர்கள், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, கல்லூரி மாணவனை வெட்டியது அவரது நண்பர்களான ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் (22), அஜித்குமார் (22), மிட்னமல்லியைச் சேர்ந்த வசந்தவேலன் (23), ஆவடி காமராஜர் நகரைச் சார்ந்த அஜீஸ் (22), ஆவடி ராமலிங்க புரத்தைச் சேர்ந்த தனசேகர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோகுல்நாத், அஜித்குமார், வசந்தவேலன், தனசேகர் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் இன்று (டிசம்பர் 30) கைது செய்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், தீபாவளி பண்டிக்கையின் போது தயாளனுக்கும், அவரது நண்பர்களுக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாகவே தயாளனை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
அதன் பிறகு, நான்கு பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரான அஜிஸ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.