சென்னை வடபழனி நூறடி சாலையில் உள்ள ஹெச்.டி.எப்.சி வங்கி பேருந்து நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி இரவு இளம்பெண் ஒருவர் பேருந்திற்காக காத்து கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ராஜ் மதுபோதையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இதனை கண்ட அங்குள்ள பொதுமக்கள் காவலர் ராஜை சரமாரியாக தாக்கியதில் ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி காவல் துறையினர் காவலர் ராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காவலரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் எம்.ஜி.ஆர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ராஜ் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவும் பிறப்பித்தார்.
இந்த நிலையில் தலைமை காவலர் ராஜ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் பெண்கள் தனியாக இருந்ததால் உடனடியாக வீட்டிற்கு செல்ல சொன்னதாகவும், அப்போது அங்கு வந்தவர்கள் அதை சொல்வதற்கு நீங்கள் யார் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னை ஹெல்மெட் மற்றும் கையில் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவலரை ஹெல்மெட் மற்றும் கையில் தாக்கி காயம் ஏற்படுத்திய தனியார் நிறுவன ஊழியரான மதுரையை சேர்ந்த தங்கமணி(24), விக்னேஷ்(24), வடபழனியை சேர்ந்த அஸ்வின் கிருஷ்ணா(26), மெக்கானிக் அருண், கே.கே நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக்(23) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது, அவர்கள் மீது கலகம் செய்தல்,பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், காயப்படுத்துதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: சங்கிலித் திருடனைப் பிடித்த காவலர்களுக்கு ராமநாதபுரம் எஸ்.பி. பாராட்டு!