கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் மலர்விழி மற்றும் காவலர்கள் மதுக்கடத்தலைத் தடுக்கும் பொருட்டு மாளிகம்பட்டு தரைப்பாலம் அருகில் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டபோது இரு சக்கர வாகனத்தில் ஐந்து வெள்ளை நிற பாலிதீன் பையில் 125 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மாளிகம்பட்டு அம்மன்கோயில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் பத்மநாபன் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே காடாம்புலியூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளன.
எனவே இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் பத்மநாபன் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.