மேற்கு வங்காளத்தைச் சார்ந்த பப்லு என்பவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராயபுரம் ரயில் நிலையம் அருகே தற்காலிக குடியிருப்பில் தங்கி கட்டுமானப் பணி செய்து வருகிறார். இந்நிலையில், தனது நண்பரை சந்திப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்ற பப்லுவிடம் ஒருவர், தான் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், வேலையின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கட்டுமானப்பணியில் சேர்த்துவிடுவதாகக் கூறி அவரை தனது குடியிருப்பிற்கு அழைத்து வந்த பப்லு, அந்த நபரை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வெளியே சென்றார். பின்னர் அந்த நபர் பப்லுவின் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றார். இதையடுத்து, பப்லுவின் மூத்த மகன், மகள் மட்டும் வீடு திரும்பிய நிலையில், மூன்று வயது இளைய மகளான மரிஜூனாவையும், அந்த நபரும் திரும்பி வரவில்லை.
வெகு நேரம் ஆகியும் அந்த நபர் வராததால் அச்சமடைந்த பப்லு, அப்பகுதி முழுவதும் குழந்தையுடன் சென்ற அந்த நபரை தேடினார். பின்னர் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், ராயபுரம் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதையடுத்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் அந்த நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது!