சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னகுமார் (53). இவர் தியாகராய நகர் திருமலை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாயிற்காவலாளியாக, கடந்த 19ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இதற்குமுன் இந்தக் குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஒழுங்காக பணிபுரியவில்லை என பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சரவணன், தற்போது பணியிலிருக்கும் ரத்னகுமாரிடம் நீ எப்படி இங்கு பணிபுரியலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, சரவணன் தான் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் ரத்னகுமாரின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த ரத்னகுமாரை அருகிலிருந்தோர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். இந்நிகழ்வு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல் துறையினர், தாக்குதல் நடத்திய சரவணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ரத்னகுமார் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மாம்பலம் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீஸ் வலைவீச்சு!