கடந்த நவம்பர் 9ஆம் தேதி சென்னை ஐஐடியில் ஃபாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்விவகாரத்தை கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால், இவ்வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்று, தனது மகளின் அலைபேசிப் பதிவை அடிப்படையாகக் கொண்டு கேரள முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரிடம் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் புகாரளித்தார். பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்களின் அடிப்படையில், வழக்கு மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகும் மாணவி தற்கொலைக்கு காரணமான ஐஐடி பேராசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. இதனையடுத்து, மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. இவ்வழக்குத் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளும் அதனை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கும், இவ்வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஃபாத்திமா கொலை செய்யப்பட்டிருக்கலாம் - தந்தை அப்துல் லத்தீப் சந்தேகம்