அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்டத்தின்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கலையரசன் விசாரணை அலுவலராக நியமனம் செய்து உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா கடந்த 11ஆம் தேதி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணையில் நிதி முறைகேடுகள், பதவி உயர்வு முறைகேடுகள் உள்ளிட்டவை குறித்து வந்த புகார்களையும் தெளிவாக கூறி இருந்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனிடம் உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா நேற்று(நவ.16) ஆவணங்களை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி பொன். கலையரசன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அலுவலர் கலையரசன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக அப்பல்கலைக்கழகத்தின் சட்டத்தின்படி விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக சூரப்பா பதவியேற்ற முதல் நாளில் இருந்து தற்போது வரை நடைபெற்ற பணி நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் விசாரணை செய்யப்படும். தேவைப்பட்டால் சூரப்பா பதவி ஏற்பதற்கு முன்பு நடைபெற்ற நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் விசாரிக்கப்படும்.
அதேசமயம் விசாரணைக்கு தேவைப்படும்பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா, அவரது குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகார்கள் குறித்து விசாரிப்பதற்கான அலுவலகம், அதற்குரிய இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அங்கு விசாரணை மேற்கொள்வதற்காக காவல்துறை, நிதித்துறை நிர்வாக அனுபவம் பெற்ற அலுவலர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன் பின்னர் விரைவில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.
எனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தவுடன் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கும். அதனால் அரசு அளித்துள்ள காலக்கெடுவிற்குள் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சஸ்பெண்ட்?