இடைத்தரகர் ஜெயக்குமாரை ஏழு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், இன்று ஐந்தாவது நாளாக சிபிசிஐடி தரப்பில் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் குரூப்-4, குரூப்-2A, வி.ஏ.ஓ. ஆகிய மூன்று தேர்வு முறைகேடுகளிலும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் தான் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், மாவட்டத்திற்கு ஒரு ஏஜெண்டு என ஒரு நிறுவனம் போல இந்த முறைகேட்டை செய்ததாக ஜெயக்குமார் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஜெயக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏஜெண்டுகளின் பெயர்களைச் சேகரித்துள்ள காவல் துறையினர், முறைகேட்டில் அவர்களுக்குள் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களையும் சேகரித்துவருகின்றனர். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.
குரூப்-4, குரூப்-2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு வழக்கில் தற்போது வரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வில் முறைகேடாகப் பணியில் சேர்ந்த மேலும் இருவரை சிபிசிஐடி கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது