கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம் பெல்காம் அருகேயுள்ள அஞ்சனா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சச்சின் - அனிதா தம்பதி. வேறு ஒருவருடன் அனிதா திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 3ஆம் தேதி வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. அப்போது, வாக்குவாதம் முற்றி அனிதா ஒரு மரக்கட்டையை கொண்டு கணவர் சச்சின் தலை மீது சராமரியாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, எருமை உயிரிழந்து விட்டதாகக் கூறி ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்த அனிதா, உடலை அடக்கம் செய்ய குழி தோண்டினார். பின்னர் தனது சகோதரர், சகோதரி, நண்பர் உதவியுடன் சச்சினின் உடலை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்தார்.
இது குறித்து நிபானி கிராம காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் தொடர்புடைய நால்வரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் மனைவியே கணவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.