மாஸ்கோ: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ரஷ்யா, "லூனா-25" (Luna-25) என்ற விண்கலத்தை , ஆகஸ்ட் 11ஆம் தேதி விண்ணில் ஏவி இருந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கிழக்கே உள்ள வோஸ்டோச்னி ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட லூனா 25 விண்கலம், கடந்த 17ஆம் தேதி, வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.
அதன்பிறகு நிலவின் சுற்றுவட்டப் பாதையின் உயரத்தை குறைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. நாளை (ஆகஸ்ட் 21ஆம் தேதி) நிலவில் தரையிறங்கும் வகையில், இறுதிக்கட்ட சுற்று வட்டபாதையை குறைக்கும் பணிகளில் ரஷ்ய விண்வெளித்துறை விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, லூனா 25 விண்கலத்தின் இறுதிக்கட்ட சுற்றுவட்டப் பாதையை குறைக்க முடியாத நிலை உருவானது. இதனை அடுத்து, ஏற்கனவே சுற்றி வந்த நிலவின் சுற்றுவட்ட பாதையிலேயே லூனா 25 விண்கலம் தொடர்ந்து சுற்றி வந்தது.
நிலவின் தென்துருவப் பரப்பில் நேரடியாக, லூனா 25 விண்கலம் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தரையிறங்குவதற்கு முந்தைய நிலவின் சுற்றுவட்ட பாதையில் லூனா 25 விண்கலத்தில் தூரம் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டது.விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக, ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், லூனா -25 விண்கலம் தரைக் கட்டுப்பாட்டு அமைப்பு உடனான தொடர்பை இழந்து உள்ள நிலையில், லூனா 25 விண்கலம், நிலவில் விழுந்து நொறுங்கி உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
லூனா 25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருந்த நிலையில், அவர்களின் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனை அடுத்து, லூனா 25 விண்கலம், நிலவில் விழுந்து நொறுங்கிய தகவலை, ராஸ்கோஸ்மோஸ் உறுதி செய்து உள்ளது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுக்கு லூனா-25 விண்கலத்தை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது