தீபாவளி திருநாள், நேற்று (அக் 24) உலகெங்கிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், தீபாவளி திருநாள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வு, இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் 2008ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நடைபெற்றது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அதிபரின் மனைவி ஜில் பைடன் ஆகியோர் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், சித்தார் கலைஞர் ரிஷப் ஷர்மா மற்றும் தி சா டான்ஸ் கம்பெனியின் நடனக் குழுவினர் ஆகியோர் இந்திய கலாச்சாரங்களை கலைகள் மூலம் அரங்கேற்றினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்தியர்கள் புடவை, லெஹங்கா மற்றும் ஷெர்வானி போன்ற பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். இதன் விருந்து உபசரிப்பில் சில இந்திய உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. அப்போது ஜோ பைடன் கூறுகையில், இந்தியர்களுக்கு விருந்தளிப்பதில் பெருமையடைகிறோம். தீபாவளி பண்டிகை அமெரிக்க கலாச்சாரத்தின் ஒருபகுதியாக மாறிவிட்டது. உங்களுக்கு விருந்தளிப்பதில் பெருமையடைகிறோம். தீபாவளி வரவேற்பு வெள்ளை மாளிகையில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்றார்.
இதையும் படிங்க: உலகின் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று - ஜோ பைடன்