டெல்லி: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கத்தாரில் நேற்று(டிச.18) நடைபெற்றது. இதில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி பிரான்சை தோற்கடித்து கோப்பையை வென்றது. ஆரம்பம் முதலே பரபரப்பாக இருந்த ஆட்டத்தை மைதானமே அதிரும் வகையில் ரசிகர்கள் கண்டுகளித்தனர். அதேபோல், உலகளவில் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் நேரலையில் இப்போட்டியை கண்டுகளித்தனர்.
இந்த நிலையில், நேற்றைய ஃபிஃபா இறுதிப்போட்டியை கூகுளில் கோடிக்கணக்கான மக்கள் தேடியதாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி குறித்த தேடல், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவு ட்ராஃபிக்கை இணையத்தில் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த உலகமும் ஒரு விஷயத்தைப் பற்றி தேடுவது போல இருந்ததாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.