சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கிவருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்துவிட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்த வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி நான்கு கோடியே 73 லட்சத்து 27 ஆயிரத்து 309-க்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 11 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இதுவரை மூன்று கோடியே 40 லட்சத்து 36 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகிலேயே அதிகளவு பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா தொடர்கிறது. தொடர்ச்சியாகத் தினமும் 800-க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு உயிரிழந்துவருகின்றனர். இதுவரை 95 லட்சத்து 67 ஆயிரத்து 543 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 36 ஆயிரத்து 997 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்றைய (நவ. 02) நிலவரப்படி 38 ஆயிரத்து 310 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 82 லட்சத்து 67 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதேபோல், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலும், நான்காவது இடத்தில் ராஷியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.