டெல்லி: அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 348 என்ற விமானம் நேற்று (பிப்.3) 184 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் 1,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமான என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்தது. எனவே உடனடியாக உரிய முறைகளின்படி, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
மேலும் அதில் இருந்த 184 பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்குவதற்கான அறைகள் மற்றும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்தின் ஒழுங்குமுறை பொது இயக்குநரகம் (DGCA) நடத்திய விசாரணைக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனம் அளித்த அறிக்கையில், “விமான என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, அந்த விமானம் புறப்பட்ட அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலேயே மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இதுதொடர்பாக விமான கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு முறையான வழிகாட்டுதலின்படி தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு மாற்று பயண சேவை வழங்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் பயணத்தை மேற்கொள்ளாமல் தாமதித்ததற்கு ஏர் இந்தியா குழுமம் சார்பில் வருந்துகிறோம்” என தெரிவித்துள்ளது.
"பயணிகளுக்கான மாற்று விமானம் B737-800, திருவனந்தபுரத்தில் இருந்து நேற்றிரவு 10 மணிக்கு புறப்பட்டு, தொடர்ந்து 4 மணி நேரம் பயணித்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை நள்ளிரவில் சேரும். இன்று (பிப்.4) அபுதாபியில் இருந்து கோழிக்கோடுக்கு பயணிகளுடன் விமானம் சென்றடையும்" என டிஜிசிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் தோசை சப்ளை போட்டி? - ஆனந்த் மஹிந்திரா ருசிகரம்