ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்காவில் பிளாட்டினம் சுரங்கத்தில் மின் தூக்கி பழுதாகி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
உலக அளவில் பிளாட்டினம் உற்பத்தியில் தென் ஆப்பிரிக்கா முதன்மை வாய்ந்த நாடாக காணப்படுகிறது. ஐரோப்பிய கண்டம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பிளாட்டினம் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவின் வடக்கு நகரமான ருஸ்டென்பெர்க்கில் இம்பாலா என்ற பிளாட்டினம் சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
கடந்த திங்கட்கிழமை மாலை, பணி முடிந்து ஊழியர்கள் மின் தூக்கி மூலம் சுரங்கத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருந்து உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின் தூக்கி பழுதாக்கி கிழே விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் சிக்கி 75 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக பிளாட்டினம் சுரங்க நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சுரங்க விபத்துகள் அதிகம் நடைபெறும் இடமாக தென் ஆப்பிரிக்கா காணப்படும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் சுரங்க விபத்தில் சிக்கி 49 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன் 74 பேர் வரை இந்த சுரங்க விபத்துகளில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2000 ஆண்டுகள் வாக்கில் 300 என்ற அளவில் இருந்த உயிரிழப்புகள் தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டு உள்ளதாக தென் ஆப்பிரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் உத்தரகாண்டில் சுரங்க பணியில் ஈடுபட்டவர்கள் பாறை மற்றும் மண் சரிவில் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணியில் 17 நாட்களாக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க : போர்நிறுத்தத்தை நீட்டிக்க நான்காவது கட்டமாக பணயக்கைதிகளை விடுவிக்க தயாராகும் இஸ்ரேல்-ஹமாஸ்!