இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய், வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா, தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருக்கிறார். லண்டனிலிருந்து அவரை இந்தியா கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.
இதுதொடர்பாக லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும் அரசுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இதற்கிடையே, விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது.
இது குறித்து பிரிட்டனிலுள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், "நாடு கடத்துவது தொடர்பாக கடந்த மாதம் லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராகவே தீர்ப்பு கிடைத்தது. இதுதொடர்பாக பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சில சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்கின்றன. பிரிட்டன் சட்டப்படி அனைத்துச் சட்டச் சிக்கல்களும் தீர்க்கப்பட்ட பின்னரே, ஒருவரை நாடு கடத்த முடியும். இப்போதுள்ள சட்டச் சிக்கல் எப்போது முடிவுக்கு வரும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. விரைவில் இதைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்" என்றார்.
விஜய் மல்லையாவை நாடு கடத்துவதிலுள்ள சட்டச் சிக்கல் குறித்து, மற்ற தகவல்களைப் பகிர்ந்துகொள்ள தூதரக அலுவலர் மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: சைபீரியாவில் 'எமர்ஜென்சி'.. 20 ஆயிரம் டன் எண்ணெய் கசிவால் பதற்றம்!