கிங் ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடமிருந்து ரூ.9000 ஆயிரம் கோடி கடனை பெற்று, அதைத் திருப்பச் செலுத்த முடியாததால் பிரிட்டன் நாட்டுக்குச் சென்றுவிட்டார். அவரை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கு அந்நாட்டில் நடைபெற்றுவருகிறது.
லண்டன் உயர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதியளித்தது. இதை எதிர்த்து அவர் பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் கடனை முழுவதுமாக திருப்பிச் செலுத்திவிடுவதாக ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து விஜய் மல்லையா, "கோவிட்-19 நிவாரண தொகுப்பை அறிவித்துள்ள(இந்திய) அரசுக்கு வாழ்த்துகள். அவர்கள் விரும்பும் அளவுக்குப் பணத்தை அவர்கள் அச்சிடலாம், ஆனால் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வங்கிக் கடன்களை 100 விழுக்காடு திருப்பிச் செலுத்திவிடுகிறேன் என்ற எனது கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறதா? மேலும், தயவுசெய்து எனது பணத்தை நிபந்தனையின்றி பெற்றுக்கொண்டு என் மீதான வழக்கை முடியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரிட்டனில் நாடு கடத்துவது தொடர்பாக நடைபெறும் வழக்கில் தான் வெற்றிபெற மாட்டோம் என்பதை புரிந்துகொண்டுதான் விஜய் மல்லையா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாகச் சிலர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் விஜய் மல்லையா கடந்த காலங்களில் தான் பெற்ற வங்கிக் கடன்களை 100 விழுக்காடு திருப்பிச் செலுத்திவிடுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள எந்த வங்கியும் தயாராக இல்லை.
இதையும் படிங்க: கரோனாவை அழிக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை - உலக சுகாதார அமைப்பு