கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா படைகள் பிப். 24ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த போர் நடவடிக்கை காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி ‛ஆபரேஷன் கங்கா' என்னும் பெயரில் விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருகின்றனர்.
இதனிடையே உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ்வில் மார்ச் 1ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில், கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா (22) உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. விரைவாக உடலை சொந்த நாட்டிற்கு கொண்டுவர கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் மேலும் ஒரு இந்திய மாணவர் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று(மார்ச்.3) போலந்தின் ரெஸ்ஸோவ் விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் ஊடகங்களுக்கு தெரிவித்தார். சுடப்பட்ட மாணவருடைய தகவல்கள் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: இந்தியா வருமா மாணவரின் உடல்? - வைரலாகும் நண்பர்கள் அனுப்பிய வீடியோ