ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கூடும் நெரிசலான இடங்களான பொதுப் போக்குவரத்துகள், வாகன நிறுத்துமிடங்கள், லிஃப்ட்கள் உள்ளிட்ட இடங்களில் செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என அந்நாட்டு பொது சுகாதார நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (அக்.27) மொத்தம் 16 ஆயிரத்து 550 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 320 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொடங்கியது முதல் அந்நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இதுவே உச்சமாகும்.
இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பொழுதுபோக்கு நிகழ்வுகள், கஃபேக்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் இரவு 11 மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிவரை ஊரடங்கை அமல்படுத்துமாறும் ரஷ்யாவின் பொது சுகாதார நிறுவனம் அந்நாட்டின் பிராந்திய அலுவலர்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கரோனாவால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நான்காவது நாடாக ரஷ்யா தற்போது உள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் ஒன்றுக்கு புதிதாக, குறைந்தபட்சம் 15 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை மொத்தம் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இருந்தபோதிலும் அந்நாட்டில் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்த அந்நாட்டு அரசு தயக்கம் காட்டி வருகிறது.
முன்னதாக கோடைக்காலத்தை ஒட்டி அந்நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கரோனா தொற்று குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.