பணியைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு இளைஞனின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி மார்க்ஸ் தனது 17ஆவது வயதில் எழுதிய இக்கட்டுரை, நமக்கு பணித்துறை தெரிவு பற்றிய தெளிவான புரிதலைக் கொடுக்கிறது. இயற்கையின் மற்ற படைப்புகளோடு ஒப்பிடுகையில் மனிதனுக்கு மட்டுமே அமைந்துள்ள சிறப்புதான் பணியைத் தேர்ந்தெடுப்பது. ஆனால் இதில் ஒருவன் செய்யும் தவறு அவன் வாழ்க்கையை சிதைத்துவிடக்கூடிய கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது என்கிறார் மார்க்ஸ்.
ஒருவன் பணியைத் தேர்வு செய்வதில் தவறு செய்யும் பட்சத்தில், சுய அவமதிப்பு, சுய ஏமாற்றம் போன்றவை அவனை முற்றிலுமாக சிதைத்துவிடும் என்பது அவர் கூற்று...
சுய அவமதிப்பு
ஆராய்ந்து முடிவு செய்யாமல் அவசரத்தில் தேர்ந்தெடுக்கும் பணி, ஒரு கட்டத்தில் நம் நம்பிக்கையை சுக்குநூறாக்கிவிடுகிறது. நாம் இந்தப் பணிக்குத் தகுதியான நபரா? என்ற கேள்வி நமக்குள் எழத் தொடங்கும். அந்த பணிக்கு ஏற்ற ஆற்றல் நம்மிடம் இல்லாத பட்சத்தில், இயலாமையை எண்ணி வெட்கித் தலைகுனிவோம். சுய அவமதிப்பு நம் மனதை நெருடிக்கொண்டே இருக்கும். சக மனிதர்கள் மீது வெறுப்புணர்வு அதிகரிக்க இது காரணமாக அமைந்துவிடும். எனவே, பணியைத் தேர்ந்தெடுப்பதில் ஆராய்ந்து செயல்படுவது மிக அவசியம்.
சுய ஏமாற்றம்
ஒரு மனிதனை வேறெந்த உணர்வைக் காட்டிலும் உயர்த்தவல்லது மதிப்புணர்வு. அது நாம் செய்யும் செயல்களுக்கும், முயற்சிகளுக்கும் உத்வேகத்தை அளிக்கக்கூடியது. அடிமைத்தனமின்றி எந்தப் பணி நம்மை நம் சுதந்திர எல்லைக்குள் பயணிக்கச் செய்கிறதோ, அதுவே மதிப்புணர்வை அளிக்கக்கூடிய பணி. நாம் தேர்ந்தெடுத்த பணியின் சத்தியத்தன்மை பொய்யென உணரப்படும் வேளையில், சுய ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இதயத்தில் ஆழமாக வேர்விட்டு நமது வாழ்க்கையும், முயற்சிகளையும் முழுவதுமாக ஒரு பணியின் சத்தியத்திற்காகத் தியாகம் செய்ய முடியுமெனில், அதுவே உன்னதமான பணி. நாம் தேர்ந்தெடுக்கும் பணியின் வாயிலாக மனிதகுல முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்கிறார் மார்கஸ்.
மனிதகுல முன்னேற்றத்துக்காக அல்லாமல் சுயநலமாக ஒருவன் உழைக்கிறான் எனில், அவன் கற்றறிந்த அறிஞனாக மாறலாம். ஆனால் முழுமையான மனிதனாக முடியாது. மனித குல முன்னேற்றத்துக்காக உழைப்பவனையே வரலாறு போற்றுகிறது, அவனையே இந்த உலகம் பின்பற்ற விரும்புகிறது. அப்படியான பணியை நாம் தேர்வு செய்துவிட்டால், அந்த பணிச்சுமை நம்மை அழுத்த முடியாது. அது மனிதகுலத்துக்காக நாம் செய்கிற தியாகம்.
நம் சாம்பலை உன்னத மனிதர்களின் கண்ணீர் ஈரமாக்கும் என்கிறார் மார்க்ஸ்...