உலகம் தொழில்நுட்பங்களால் சூழப்பட்ட பிறகு அடிப்படையான மனிதம் என்பது தொலைந்துபோய்விட்டது. குறிப்பாக, செல்ஃபிக்களின் வருகைக்கு பிறகு எங்கு எது நடந்தாலும் தங்களது செல்ஃபோனை எடுத்துக்கொண்டு செல்ஃபி எடுக்க ஒரு படை கிளம்பிவிடுகிறது. அதில் வேதனை தரும்விதமாக ஒரு விபத்து நடந்தால் அந்த இடத்தில் இருந்துகொண்டோ, விபத்தில் சிக்கியவருடனோ உடனடியாக ஒரு செல்ஃபியை எடுத்தோ, புகைப்படம் எடுத்தோ சமூக வலைதளங்களில் பதிவேற்றி லைக்குகளுக்கும், கமெண்ட்டுகளுக்கும் அடிமையாகி கிடக்கிறது தற்கால சமூகம்.
இந்நிலையில், நேற்று முன் தினம் (5.6.2019) ஜெர்மனி நாட்டில் நியூரம்பெர்க் என்ற இடத்தில் விபத்து ஒன்று நடந்தது. அந்த விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம் அடைந்தார். ஆனால் தனது வாகனத்திற்குள் இருந்தவாறே விபத்தில் சிக்கியவரை புகைப்படம் எடுத்த ஒருவரை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஸ்டீபன் என்ற காவல் துறை அலுவலர் கவனித்தார்.
உடனே அந்த நபரிடம் சென்ற ஸ்டீபன் அவரை வாகனத்தை விட்டு கீழிறக்கி, `அவர் யார் என்னவென்று விசாரிக்கக்கூட உங்களுக்குத் தோன்றவில்லை. ஆனால், புகைப்படம் எடுக்கிறீர்கள். இது தகுந்த செயல் இல்லை. உங்களது செயல் வெட்கப்படக்கூடியது. புகைப்படம் எடுத்ததற்காக 128.50 யூரோ (இந்திய மதிப்பில் 10,000 ரூபாய்) அபராதமாகக் கட்ட வேண்டும். அதுமட்டுமின்றி உங்கள் வாகனம் தொடர்பான ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு அனைத்தையும் கொண்டு வந்து காட்ட வேண்டும்’’ என காட்டமாக பேசினார். அதேபோல், விபத்தில் சிக்கியவரை புகைப்படம் எடுத்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் ஸ்டீபன் கடுமையாக எச்சரித்தார்.
துடித்துக் கொண்டிருப்பது ஒரு உயிர் அதனை காப்பாற்ற வேண்டும், முதலுதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாமல் மனிதத்தை கொலை செய்து புகைப்படம் எடுக்க துடித்துக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், மனிதத்தை கொஞ்சமேனும் வைத்திருக்கும் ஸ்டீபன் போன்றவர்களால்தான் இந்த பூமி இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது. இவர்தான் உண்மையான ஹீரோ என பலர் அவரை புகழ்ந்து வருகின்றனர். மேலும், இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.