வடகொரியாவின் அணு ஆயுத பயிற்சிகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததால், பொருளாதார ரீதியாக அந்நாட்டை உலக நாடுகள் தனிமைப்படுத்தியுள்ளன. இதனால், சமீப காலமாக வடகொரியா சமாதான பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது.
இதன் விளைவாக, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே சிங்கப்பூரில் 2018 ஜூன் மாதம் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, அணு ஆயுதங்களை படிப்படியாக விட்டொழிப்போம் என கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் வியாட்நாம் தலைநகர் ஹனாயில் மீண்டும் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக எந்த ஒரு உடன்படிக்கையும் செய்யாமல் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா-வடகொரியா இடையே பலமாதங்களாக கிடப்பில் கிடந்த அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தை நேற்று ஸ்வீடனில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வடகொரியா தலைமை சமரச பேச்சாளர் கிம் மியோங் கில், "அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒழிப்பு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஏனெனில், பேச்சுவார்த்தையில் அமெரிக்கா எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டுவரவில்லை" என்றார்.
எனினும், வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்ததென்றும், இரண்டு வாரங்கள் கழித்து ஸ்வீடனில் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை தொடங்க தயார் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் மார்கன் ஒர்டோகஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நீர்மூழ்கிக் கப்பல் மூலம் வடகொரியா ஏவுகணை சோதனை? - மீண்டும் பரபரப்பு