பஞ்சாப் தேசிய வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ஏமாற்றிய வழக்கில் இந்தியாவால் தேடப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி விரைவில் கைது செய்யப்பட்டு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இந்திய அலுவலர் ஒருவர் கூறுகையில், ஏப்ரல் மாதம் சிபிஐ அலுவலர்களும், அமலாக்க துறையினரும் லண்டன் சென்று ஆவணங்களை சமர்பித்த பிறகுதான் மோடியை கைது செய்ய முடியும் எனவும், அதற்கு பிறகு தான் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் கூறினார்.
ஆனால் சம்பந்தப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்காத வரை அவரை கைது செய்ய முடியாது எனவும் கூறப்படுகிறது. முன்னதாக, நீரவ் மோடி இங்கிலாந்திலிருந்து ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் சென்று வருவதாக தகவல் வெளியானது.
முன்னதாக, அமலாக்க துறை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடியை நாடு கடத்த சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால், நீதிபதி கைது செய்வதற்கு முன்பு பிடியாணை பிறப்பிக்க முடியாது எனக் கூறி சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டது.