பெப்ஸி, கோக்க கோலா, மெக்டோனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களின் வணிக செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளன.
முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோவின் தலைமை செயல் அலுவலர் ரமோன் லகுரத்தா இது குறித்து வெளியிட்டுள்ள கடிதத்தில், உக்ரைனில் நடைபெறும் மோசமான சூழல்களைக் கருத்தில் கொண்டு எங்களின் பிராண்டுகளான பெப்சி-கோலா, 7அப், மிராண்டா ஆகிய நிறுவனங்கள் தங்களின் வணிக செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறது. அதேவேளை, பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் விற்பனையை ரஷ்ய சந்தையில் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், பெரு வணிக நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துவருகின்றன. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துவருகின்றன. இருப்பினும் ரஷ்யா தனது போர் தாக்குதலை நிறுத்திவைக்காமல் தொடர்ந்து முன்னகர்ந்துவருகிறது.
இதையும் படிங்க: போர் பாதித்த உக்ரைனுக்கு பெரும் தொகையை நிதியுதவி - டி கேப்ரியோவின் மனித நேயம்