மூன்று மாதங்களுக்கு முன்பு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக ஆறு வரைவுத் தீர்மானங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 751 உறுப்பினர்களில் 626 உறுப்பினர்கள் இத்தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முக்கியமான ஆறு அரசியல் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானங்கள் நாளை (ஜனவரி.29ஆம் தேதி) பிரஸ்ஸல்ஸில் நடக்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முழுமையான அமர்வில் முன்மொழியப்பட்டு, மறுதினம் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இதற்கிடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இருப்பினும், சிஏஏ சரியான முறையில்தான் சட்டமாக்கப்பட்டுள்ளது என்பதை பிரஸ்ஸல்ஸ் உணரும் என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், "ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் சிஏஏவை எதிர்த்து வரைவுத் தீர்மானங்கள் கொண்டு வர எண்ணுகிறார்கள் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சிஏஏ என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். மேலும், அது நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிறகு ஜனநாயக வழிமுறைகளுடன் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தது.
ஐரோப்பிய நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நிகழ்ச்சி நிரலின்படி, தீர்மானங்களை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய ஒரு அறிக்கையை ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் ஜோசப் பொரெல் முதலில் வெளியிடுவார். இதையடுத்து தீர்மானங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் காஷ்மீரில் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு பின், ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது இந்திய அரசு தரப்பில், "இயற்கைமயமாக்கலுக்கான பாதையை வடிவமைக்க ஒவ்வொரு சமூகமும் சூழல், அளவுகோல்கள் ஆகியவை குறித்து சிந்திக்கிறது; இது பாகுபாடு அல்ல. உண்மையில், ஐரோப்பிய சமூகங்களும் இதேபோன்ற அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளன. எனவே வரைவின் ஆதரவாளர்கள், அதுதொடர்பான துல்லியமான மதிப்பீட்டைப் பெற எங்களுடன் தொடர்பு கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம் ”என்று வாதாடப்பட்டது.
இவ்விவகாரங்களில் சர்வதேச விதிமுறைகள், மனித உரிமைகள் ஆகியவை மீதான கடமைகளை இந்தியா மீறியதாக மேற்கூறிய தீர்மானங்கள் மேற்கோள் காட்டுகின்றன. அவற்றில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்குப் பிறகு, தடுப்புக் காவல்கள், தகவல் தொடர்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளைப் குறிப்பிடுகின்றன.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் சிஏஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், தடுப்புக் காவலில் அரங்கேறிய துன்புறுத்தல்கள் பற்றியும் குறிப்பிடுகின்றன. அது மட்டுமல்லாமல், தேசிய குடிமக்கள் பதிவேடானது, ”தங்களுக்கென்று ஒரு நாடில்லாத நிலையை உருவாக்கி, மக்களுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும்" என்ற அச்சத்தையும் தீர்மானங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் ரெய்சினா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கும் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோசப் போரெல்லுக்கும் இடையே விவாதங்கள் நடைபெற்றன.
அந்த விவாதத்தில் ஐரோப்பிய நாடாளுமன்ற குழுக்கள் கொண்டுவந்த தீர்மானங்கள் குறித்து போரெல் பேசியுள்ளார். நாடாளுமன்ற குழுக்களின் தீர்மானங்களில் உள்ளவற்றை போரெல் கூறியது பின்வருமாறு:
சிஏஏ போராட்டங்களுக்கு எதிராக இந்திய மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளன. சிலரின் உயிரிழப்புக்கு வித்திட்ட அரசுகளின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மோடி அரசாங்கம் ‘எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’ என்றும், ஜம்மு காஷ்மீரில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும் பாகுபாடில்லாத மனப்பான்மையில் செயல்பட்டு சிஏஏவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக விவாதித்த மத்திய அரசு வட்டாரங்கள், ”உலகின் பிற பிராந்தியங்களில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகளின் அதிகாரம், உரிமைகள் ஆகியவற்றைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளில் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஈடுபடக்கூடாது” என்று கூறியுள்ளன.
இந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிரஸ்ஸல்ஸில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய - இந்திய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்மானங்கள் விவகாரம் ஒரு நிழல்தன்மையை ஏற்படுத்தக்கூடும். பிரதமர் மோடி பிரஸ்ஸல்ஸ் வந்த பின் விவாதிக்க வேண்டும் என ஒரு தீர்மானம் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், ஜம்மு காஷ்மீரைப் பார்வையிட அமெரிக்க, நார்வே, தென் கொரிய தூதர்கள் ஜம்மு காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டனர். ஆனால் இப்பயணத்தில் ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் கலந்துகொள்ளவில்லை.
பயணத்தில் அங்குள்ள பொதுமக்களையும் அரசியல் தலைவர்களையும் சந்திக்க சுதந்திரம் அளிக்கப்படாவிட்டால் தாங்கள் பங்குபெற மாட்டோம் என்று ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் கூறியதாகத் தகவல் வெளியாகியது. இச்செய்தியை வெளியி மறுத்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஐரோப்பிய ஒன்றிய தூதர்களின் ஜம்மு காஷ்மீர் பயணத்துக்கு வேறொரு தேதியை திட்டமிட்டு வருவதாகக் கூறியுள்ளது.
இதையும் படிங்க: நாட்டை பிளவுபடுத்த முயல்பவர்களை கெஜ்ரிவால் ஆதரிப்பது ஏன் - ஜே பி நட்டா கேள்வி