பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்றுவிட்டு மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஷி ஆகியோர் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டை விட்டு தப்பியோடினர்.
நீரவ் மோடியின் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டுவருகின்றன. மேலும் இந்தியாவில் நீரவ் மோடியின் பல்வேறு சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
இந்நிலையில், நீரவ் மோடி லண்டனில் சுதந்திரமாக திரிவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அமலாக்கத் துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு எதிராக கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நீரவ் மோடியின் பிணை மனு மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இவ்வழக்கில் அவர் நீதிமன்றம் முன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நீரவ் மோடி பிணை மனு மீதான முந்தைய விசாரணையின்போது, நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து ஆஜராகாததால் அவருக்கு பிணை வழங்க முடியாது என நீதிபதி கூறியது குறிப்பிடத்தக்கது.