ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் இந்தாண்டு மார்ச் மாதம் உச்சத்தைத் தொட்டிருந்தது. அதன்பின், அங்கு கரோனா பரவல் படிப்படியாக குறைந்தது.
கரோனா பரவல் குறைந்ததையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்நாடுகள் அறிவித்தன. இருப்பினும், கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் குறைந்திருந்த கரோனா பரவல், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக பிரிட்டனில், கடந்த சில நாள்களாக தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டன. அந்நாட்டில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை தாண்டியது.
இதன் காரணமாக பிரிட்டனில் நாடு முழுவதும் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு டிசம்பர் 2ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போரிஸ் ஜான்சன் பேசுகையில், "நாம் இக்கட்டான நேரத்தில் உள்ளோம். இப்போது நாம் சரியான முடிவை எடுக்கவில்லை என்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது" என்றார்.
அதன்படி பிரிட்டன் நாட்டிலுள்ள அனைத்து உணவகங்கள், பார்கள் மற்றும் அத்தியாவசியமற்ற அங்காடிகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டன. இருப்பினும், முதல் ஊரடங்கை போல் இல்லாமல் இந்த காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்திருக்கலாம் என்றும், கட்டுமான பணிகளும் தொடர்ந்து நடைபெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 21,915 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 326 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: 'தேர்தல் முடிவுகள் தாமதம் ஆகலாம்' - எச்சரிக்கும் ட்ரம்ப்