பிரிட்டன் நாட்டில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 2ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் கரோனா பரவல் தற்போது குறைந்துவருவதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளார்.
அதன்படி பொதுமக்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை வீட்டைவிட்டு வெளியே வந்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். டென்னிஸ், நீச்சல், மீன்பிடித்தல் ஆகியவற்றுக்கும் தற்போது அனுமதி தரப்பட்டுள்ளது.
புதிதாக வீடுகளை வாங்க நினைப்பவர்களும் வாடகை வீடு தேடுபவர்களும் வீடுகளைப் பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொருளாதாரத்தை விரைந்து மீட்டெடுக்கும் நோக்கில் கட்டுமான தொழிலாளர்களும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் தங்கள் பணிக்குத் திரும்பலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 23ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மார்ச் மாதம் 5.8 விழுக்காடு வரை சுருங்கியுள்ளதாக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்த அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும், கரோனா பரவலைத் தடுக்க மக்கள் பொதுப் போக்குவரத்தை முடிந்தவரைத் தவிர்த்துவிட்டு சொந்த வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரிட்டன் அரசு கோரிக்கைவிடுத்துள்ளது. வேறுவழியின்றி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களும் கூட்டமான பேருந்துகளையும் ரயில் பெட்டிகளையும் தவிர்க்குமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் தற்போது இங்கிலாந்தில் மட்டுமே அமல்படுத்தப்படுவதாகவும் விரைவில் பிரிட்டன் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் போரிஸ் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: கரோனாவை அழிக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை - உலக சுகாதார அமைப்பு