தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் வாழ் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் ஆகியோர் பெருந்தொற்று காலத்தில் மற்றவர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்ததாகவும் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (நவ. 14) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து அவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தீப விளக்கை ஏற்றிவைத்துவிட்டு பேச ஆரம்பிக்கிறார். அதில், ”அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா அச்சுறுத்தலால் ஓர் அசாதாரணமான சூழலை சந்தித்து வருகிறோம். இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் வித்தியாசமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். பிரிட்டனில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் ஆகியோர் கொண்டாட்டங்களைத் துறந்து பெருந்தொற்று காலத்தில் மற்றவர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்ததற்காக நான் மரியாதை செலுத்துகிறேன்.
நமக்கு முன்பு ஏராளமான சவால்கள் நிறைந்திருக்கின்றன. அதே நேரத்தில், பிரிட்டன் மக்களின் தீர்க்கமான மன உறுதியாலும், அறிவுக் கூர்மையாலும் இந்தச் சவால்களை எளிதில் வெல்ல முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருளை வெற்றி கொள்வது எப்படி, நன்மையைக் கொண்டு தீயவற்றைத் தோற்கடிப்பது எப்படி ஆகியவையே தீபாவளி பண்டிகை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.
ராமன் ராவணனை எவ்வாறு வதம் செய்து உலகுக்கு ஒளியைப் பரப்பினாரோ, அதேபோல நாமும் கரோனாவை வெற்றிகொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார்.