இத்தாலி நாட்டின் வடக்கே பீடுமோன்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா (Stresa) கிராமத்தில், மேகியோர் ஏரி உள்ளது. இங்கிருந்து மோட்டரோன் மலை உச்சிக்குச் செல்வதற்கு கேபிள் கார் வசதி உள்ளது.
கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த இந்த கேபிள் கார் சேவை, சமீபத்தில் தான் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கேபிள் காரில் சுமார் 20 நிமிடங்கள் பயணித்து, மலை உச்சியைப் பயணிகள் அடைகின்றனர்.
இந்நிலையில் நேற்று(மே.23), மலைப் பகுதிக்கு 15 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற கேபிள் கார், 985 அடி உயரத்தில் இருந்து திடீரென அறுந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த ஒரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, இத்தாலி நாட்டு பிரதமர் மரியோ டிராகி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்செல் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.