இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக அசாதாரண சூழல் நிலவிவருகிறது. பதற்றத்தைக் குறைக்க இரு நாட்டின் உயர்மட்ட ராணுவ அலுவலர்கள் அவ்வப்போது சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ராணுவ வீரர்களுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அப்போது பேசிய அவர், ராணுவ உயர் அலுவலர்களிடம் ஆயதப் படைகளின் வளர்ச்சியே மேம்படுத்த வேண்டும் என்றும், துரிதமாகச் செயல்படும் வகையில் தயார்ப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
சீன அதிபரின் இந்த அறிவிப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், இது சீன ராணுவத்தின் செயல்பாட்டையும், வீரர்களின் திறமையை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் வெளியாகும் சாதாரண அறிவிப்பு மட்டுமே என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில்தான் இந்தாண்டுக்கான ராணுவப் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்திற்கு 179 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்தது முதலே ராணுவத்தை மேம்படுத்துவதில் முக்கியத்தவம் அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.