ரஷ்யாவின் சோச்சி நகரில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோவை நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் சமீபத்தில் தான் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்துப் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யா - அமெரிக்க நல்லுறவை மீட்டெடுப்பது, இருநாடுகளுக்குமான ஒத்த பிரச்னைகளை கூட்டாக களைவது குறித்து ட்ரம்ப் விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார். மேலும், இதனையே தாங்களும் விரும்புவதாக புடின் தெரிவித்தார்.
பனிப்போரின்போது ரஷ்யா-அமெரிக்கா இடையே கையெழுத்தான, 'இன்டர்மீடியேட் ரேஞ் நியூக்ளியர் ஃபோர்ஸ் பேக்ட்' (Intermediate Range Nuclear Forece Pact) ஒப்பந்தத்தில் இருந்து தாங்கள் விலகப் போவதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பானது நிகழ்ந்துள்ளது. வரும் வாரங்களில் ஆயுத கட்டுப்பாடு குறித்து இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
முல்லர் விசாரணை:
2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து அமெரிக்க வழக்கறிஞர் ராபர்ட் முல்லர் மேற்கொண்ட விசாரணையைப் பாராட்டி பேசிய அதிபர் விளாடிமிர் புடின், "ராபர்ட் முல்லர் நடுநிலையோடு விசாரணை மேற்கொண்டதாகவும், அமெரிக்கத் தேர்தலில் தாங்கள் தலையிடவில்லை, அதற்கு வாய்ப்பு இல்லை" என்றும் கூறினார்.
அதற்கு மைக்கேல் பாம்பியோ, "ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம் (Sergey Lavorv) தெளிவாக கூறிவிட்டேன். அமெரிக்கத் தேர்தலில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வரவிருக்கும் 2020 அதிபர் தேர்தலில் ரஷ்யர்கள் தலையீட்டால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமடையும்" என்று எச்சரித்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான முல்லர் விசாரணை அறிக்கையில், அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி- 20 மாநாடு:
முன்னதாக, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மைக்கேல் பாம்பியோ சந்தித்துப் பேசினார். அப்போது செர்ஜி லாவ்ரோவ், "ஜி-20 மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக நாங்கள் கேள்விப்பட்டோம். அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வருமேயானால் அதனை வரவேற்கிறோம்" எனத் தெரிவித்தார்.
வடகொரியா, வெனிசுலா விவகாரம் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பின்போது, அமெரிக்கா-ரஷ்யா மோதலால் உலகநாடுகள் இடையே எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் லெவ்ரோவ், இருதரப்பு பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிக்கவே ரஷ்யா விரும்புவதாக தெரிவித்துள்ளார்.