இந்திய- பசிபிக் கடல் பாதுகாப்பு சீனாவுக்கு எதிராக இந்தியா?
கடற்சார் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான பிரச்னைகளை கையாளும் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் முதன்மையான மன்றமான 14 ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது இந்தோ-பசிபிக் பெருங்கடலின் முன்முயற்சி குறித்த கருத்தை முன்வைத்தார்.
அதில் 'இந்த முயற்சி நாடுகளிடையே பல தூண்களில் கூட்டாண்மைகளை உருவாக்கும். மேலும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது முதல் கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான முறையில் பயன்படுத்தவும் வகை செய்யும். திறன்களை வளர்ப்பது மற்றும் வர்த்தகம் மற்றும் கடல் போக்குவரத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது என அனைத்தும் இதில் அடங்கும்' என்றார்.
ஆசிய (ஆசியான்) நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய (இந்தோ)- பசிபிக் கடல் எல்லை, கடற்சார் வணிகம் குறித்தும் புதிய முயற்சியை முன்மொழிந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சரவையின் செயலாளர் (கிழக்கு) விஜய் தாக்கூர் சிங் கூறும்போது, "கடல்சார் களத்தை பாதுகாக்கவும், பாதுகாப்பான கடல் களத்தை உருவாக்க அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தோ-பசிபிக் பெருங்கடலின் முன்முயற்சியை பிரதமர் முன்மொழிந்தார்.
இந்த முயற்சியை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஆர்வத்தை ஆஸ்திரேலியா ஏற்கனெவே சுட்டிக்காட்டியுள்ளது” என்றும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், அடுத்த ஆண்டு (2020) சென்னையில் கடல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கையும் முன்மொழிந்தார். ஆக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பெரிய அளவில் அங்கம் வகிக்க இந்தியா ஆர்வம் காட்டுகிறது. இதற்கு பக்க பலமாக அமெரிக்கா உள்ளது.
ஏனெனில் இந்த பிராந்தியத்தில் சீனாவின் அபரிவித வளர்ச்சி, செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. ஆக சீனாவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ள அமெரிக்கா, இந்தியாவுக்கு பக்க பலமாக நிற்க வாய்ப்புகள் அதிகம். அதற்காக அமெரிக்கா முயன்று வருவதையும் யூகிக்க முடிகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னையான இந்தோ-பசிபிக் கடலில் உள்ள முக்கியமான கடல் பாதைகளை (வழித்தடங்களை) எந்தவொரு செல்வாக்குமின்றி வைத்திருக்க ஒரு புதிய மூலோபாயத்தை உருவாக்க வடிவம் கொடுத்தன.
பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நலன்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில், அந்நாடுகளின் மூத்த அதிகாரிகளும் இந்தோ - பசிபிக் நிலைமை குறித்து ஆசியான் மாநாட்டில் ஆலோசனைகளை நடத்தினார்கள். இது இந்தியாவுக்குச் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு நிகரான வளர்ச்சி - 70 ஆண்டுகளில் சாதித்த சீனா!