பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி அடுத்தவாரம் தொடங்கவுள்ளது. அந்நாட்டின் கரோனா கட்டுப்பாட்டு குழுவிற்கு தலைமை தாங்கும் திட்டத்துறை அமைச்சர் ஆசாத் உமர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும். கடவுளின் அருளால், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி அடுத்தவாரம் தொடங்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய மற்றொரு ட்விட்டர் பதிவில், ’நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிட நூற்றுக்கணக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்ஷா அல்லா சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்தவாரம் தொடங்கிவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு சீன மருந்து நிறுவனம் சினோபார்ம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக சீனா உறுதியளித்ததை அடுத்து இந்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளாவது சினாபார்ம் வழங்கும் என பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:’இக்கட்டான சூழலில் உதவும் பிரதமர் மோடிக்கு நன்றி’ - இலங்கை அதிபர்