கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்தியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அமெரிக்காவிலும் டிக் டாக் தனது சேவையைத் தொடர வேண்டுமென்றால், அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு டிக் டாக்கை விற்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானும் டிக் டாக் செயலிக்கு தற்போது தடை விதித்துள்ளது.
சட்டவிரோத உள்ளடக்கத்தை உரிய முறையில் ஆராய்ந்து, விரைவாக நீக்கும் முறையை முழுமையாக பின்பற்றத் தவறியதால், பாகிஸ்தானில் இச்செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு ஆணையம் அறிவித்துள்ளது.